Monday, November 16, 2009

பிச்சு உதறும் 2012


உலகம் முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்து, ஓடிச்சென்று திரையில் பார்த்துள்ள திரைப்படம் 2012. உண்மையினைச்சொல்லப்போனால் இந்தப்படம் எதிர்பார்த்து சென்ற எவரையும் ஏமாற்றவில்லை. எவற்றை எல்லாம் எதிர்பார்த்து சென்றார்களோ, எதிர்பார்த்ததைவிட அமர்க்களப்படுத்தி, வழியனுப்பி வைத்துள்ளது இந்த திரைப்படம் என்பதே உண்மை.

இந்தியாவில் ஆரம்பித்து உலக அழிவின் பின் மிஞ்சும் ஆபிரிக்காவின் சிறுபகுதியில் முடிகின்றது கதை. அனைவரையும் கதிரையின் நுனிக்குக்கொண்டுவரும் காட்சிகள் அதிகம்.
லோரன்ட் எமிரிச் பார்த்துப்பார்த்து செதுக்கியுள்ளார் படத்தை.


உலக அழிவில் இருந்து, மீண்டும் பூமியை உடனடியாக திருஷ்டிக்க மூளைசாலிகள், விஞ்ஞானிகள் என்பவர்களுடன், பணம் கொட்டியவர்கள், மிருகங்கள் பறவை இனங்களின் ஜோடிகள் என்று, ஊழிக்கூத்தை தாங்குப்பிடிக்க சீனாவில் தாயாரிக்கப்பட்ட, விசேட பாதுகாப்பு கலமொன்றில் பயணிக்க எடுத்த முடிவு நோவாவின் வெள்ளத்தை நினைவு படுத்துகின்றது.
மாலன் நாட்குறிப்பில் தவறு இல்லை என்பதுபோல திரைக்கதை நகர்கின்றது.
அனைத்து மக்களும் அழியும்போது, நான் மட்டும் தப்பித்து ஓடிவிட விரும்பபவில்லை, நான் அந்த மக்களுடனேயே இந்த மண்ணிலேயே இறந்துவிடுகின்றேன் என அமெரிக்க ஜனாதிபதி மற்றவர்களுக்கு கூறி வழியனுப்பிவிட்டு மடிவது கண்களில் நீரினை கொப்பளிக்கவைக்கின்றது.
கண்டிப்பாக அது அந்த அமெரிக்க ஜனாதிபதியை நினைத்து அல்ல.

Wednesday, November 11, 2009

என் மனதின் விம்பங்கள்..


விருப்பு வெறுப்புக்கள் என்பது ஒவ்வொருவரினதும், இரசனைகள், உணர்வுகள் சம்பந்தப்பட்டதாக உள்ளன. எல்லோரது விருப்பு வெறுப்புக்களும் ஒன்றாகவே இருந்துவிட்டால் உலகத்தில் சாந்தி என்ற சங்கீதம் எப்போதும் சுபம் ஏந்தி வந்து கொண்டே இருக்கும் அல்லவா?
இதேவேளை விருப்பு வெறுப்புக்கள், வயது, மாறும் சூழ்நிலைகள், சேரும் கூட்டத்தினர் சம்பந்தப்பட்டும் உள்ளது என்பது என் அனுபவங்களின் ஊடாக நான் கண்ட உண்மை. ஆக விருப்பு வெறுப்புக்கள் மாற்றத்திற்கு உள்ளாகும் என்பதுகூட ஒருவகையில் உண்மையே.
இந்த நேரத்தில் தொடர்பதிவுக்கு பதிவர்களை அழைக்கும், தொடர்பதிவுகள் என்பது என்னைப்பொறுத்தவரையில் ஆரோக்கியமான விடயமே, ஏனென்றால் இதன்மூலம் பதிவர்களிடையே ஒரு நட்புறவு ஏற்படுவது மட்டும் அன்றி, மற்றபதிவரின் விருப்புக்களையும், வெறுப்புக்களையும் அறியும் ஆவலும் பூர்த்திசெய்யப்படுகின்றது.

இந்த நிலையில் என் மதிப்புக்கும், அன்புக்கும் உரிய பன்முக திறமைகள் கொண்ட அண்ணன் ஜனா அவர்களின் தொடர்பதிவு அழைப்பு எனக்கும் விடுக்கப்பட்டுள்ளது. அவரின் அன்பு அழைப்பினை ஏற்று நானும் இங்கு எனது, மனதுக்கு பிடித்தவைகளையும், மனதுக்கு தூரமானவைகளையும் பதிந்து செல்கின்றேன்.

01. என் மனதில் என்றும் தலைவர் என்ற அந்தஸ்துடன் நிரந்தமாக இருப்பவர்
என் தலைவா.;
தலைவனாக இருப்பதற்கு தகுதி அற்றவர் என என்மனதினால் ஒதுக்கப்பட்டவர்
தனக்குத்தானே விருதுகள் கொடுத்து, வியந்து மகிழ்பவர்.

02. இசை என்னும் திரையிசை அமைப்பினால் என் மனதுக்குள் உட்கார்ந்து
மணியடித்தவர் ஏ.ஆர்.ரஹ்மான்.
இசையினால் நான் லகிப்பதால் இசையினை எப்போதும் பிடிக்கும், ஆனால்
அமைதியான பாடல்களைக்கூட, மீள்கலவை என்ற பெயரில் ஓலங்கள்
ஆக்குபவர்களை எனக்கு பிடிக்காது.

03. திரைத்துறையில் நடிப்பினால் என் இதயம் கவர்ந்தவர் கமல்ஹாசன், அதேபோல
நடிப்பினால் என் மனத்தினால் என் மனதுக்கு தூரப்பட்டவர் சிறி காந்த்

04. மனது கவர்ந்த விளையாட்டு துடப்பாட்டம் என்பதால், துடுப்பாட்டத்தில் இதயத்தில் ஆடியர் சௌரவ் கங்குலி, என்ன காரணம் என்று தெரியாமல் மனது
மறுப்பவர் யுவராஜ் சிங்.

05. திரையிசைப்பாடல்களால் என் மன இசை வெற்றிட பள்ளத்தாக்கை அழகாக
நிரப்பியவர் ஹரிகரன், பாடகர்கள் தெரிவில் முளைக்குமுன்னரே நடுவராக இருந்து திமிராக அநாகரிகமாக பேசிய கிரிஸ் எனக்கு பிடிக்கவே பிடிக்காது.

06. நிறங்களில் எனக்கு மேகநீலம் எப்போதும் பிடிக்கும், அதேபோல கறுப்பு
என்பதில் எப்போதுமே எனக்கு வெறுப்பு.

07. திரைப்படத்தை, அதன் கலைத்துவத்துடன் கண்முன் நிறுத்தும் இயக்குனரில்
எனக்கு பாலுமகேந்திராவை ரொம்ப பிடிக்கும், ஆறு குத்துப்பாட்டு, ஏழு சண்டை 3 காதல்காட்சி என்று படம் எடுப்பவர்களை மனம் வெறுக்கும்.

08. என் மனதில் கவிஞராக எப்போதும் தெரிபவர் கவிஞர் கண்ணதாசன்தான்,
பிடிக்காத கவிஞர்கள் என யாரும் இல்லை, கிறுக்கல்களைக்கூட இரசித்துப்
புடிப்பவன் நான் அந்த கிறுக்கல்கள்கூட நாளை சித்திரமாகலாம் என்ற
நம்பிக்கையில்

09. எழுத்துக்களில் எப்போதும் ஜெயகாந்தனின் எழுத்துக்களில் எனக்கு போதை
அதிகம்தான். அதேபோல சுயலாபங்கள், சுயதிணிப்புக்கள் என்பவற்றை திணிப்
பவர்கள் எழுத்துக்களால் என் மனதில் இருந்து தூரப்போபவர்கள்.

10. எனக்கு எப்போதும் பிடித்தமான நாடு, மலரப்போகும் எம் விடுதலை நாடுதான்.
துரோகங்களால் எங்கள் முதுகில் குற்றி மேலும்மேலும் துரோகமிளைக்கும்,
இந்தியா என்ற நாடுதான் நான் வெறுக்கும்நாடு.

இந்த பதிவினை தொடர பலரை அழைத்து நான் சிரமங்கள் கொடுக்கவில்லை,
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி என்ற அந்த ஆலமரத்தின் விழுதுகளில் பண்பாடி
அன்றே சுரம்பயின்ற என் மூத்தவர் ஜனா அண்ணா, அதே ஆலமரத்தில் ஒதுங்கிநின்ற என்னை அழைத்தார், இப்போ நானோ..அதே ஆலமரத்தில் விளையாடித்திரிந்த என் இளவலான கனககோபியை இந்த தொடர்பதிவுக்கு அழைக்கின்றேன்.

Tuesday, November 10, 2009

மனம் ஒரு சிம்பான்ஸி..


கண் இமைப்பொழுதுகளிலும் அசதியின்றி, சிந்தித்த வண்ணமே இருக்கின்றதே இந்த மனம். இதற்கும் ஒரு ஓய்வுவேண்டாமா? என சிலவேளைகளில் அந்தமனமே சிந்திக்கும்.
மனதை ஒருநிலைபடுத்த எடுத்தமுயற்சிகள் எல்லாவற்றிலும் வென்றது மனந்தான்.
மனம் ஒருபொழுதுகளில் தேவதையாகத்தோன்றும், பல பொழுதுகளில் சாத்தானாகவே ஆடும். சில பொழுதுகளில் சிலிர்க்கவைக்கும், பல பொழுதுகளில் திடுக்கிடவைக்கும். மனதிற்கு கடிவாளம்போட்டு தம் கட்டுப்பாட்டினுள் கொண்டுசென்றவர்கள் சித்தர்கள் ஆகினர், ஞானியர் ஆகினர்.
மனம் சொன்னதை செய்பவர்கள் பைத்தியக்காரர்கள் ஆகினர்.
மொத்தத்தில் உலகத்தின் அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் மனம் என்னும் கனமே.

மனம் ஒரு விநோதமானது, அது பற்றி ஆழமாக பல விடயங்களை சிந்தித்து, ஒரு முடிவுக்கு வரும்போதும் “இவ்வளவு நேரமும் சிந்தித்தது நான்தானே” என்று சொல்லி ஏளனம் செய்யும். நினைக்கக்கூடாதவைகளை எல்லாம் அடிக்கடி நினைக்கும்.
நினைக்கவேண்டியவற்றை வேண்டும் என்றே ஒழித்துவைக்கும்.
பல முடிவுகளின் ஆரூடங்களை அது சரியாகவே சொல்லிவிடும். எங்கள் பலத்தினை பெரிதுபடுத்தாமல், எங்கள் குறைகளையே குத்திக்காட்டிக்கொண்டு நிற்கும். பெரிய வெள்ளைத்தாளில் ஒரு சிறிய கரும்பள்ளி இருந்தால் கரும்புள்ளியைத்தான் கவனித்துப்பார்க்கும்.

நெடுநாள் பழகிய நண்பனுடன் பிரச்சினை உண்டானால், அவனுடன் பழகிய வசந்தமான நாட்கள், அவன் நமக்கு செய்த உதவிகள், மகிழ்ச்சியான தருணங்களை அப்படியே அழித்துவிட்டு, அவனது குறைகளையும், அவனது கோரத்தோற்றத்தையுமே அடிக்கடி காட்டும்.
மனம் விந்தையானதுதான், இப்படித்தான் வரவேண்டும், இப்படித்தான் நடக்கும் என உறுதியாக இருந்தால் எமக்கு அப்படித்தான் வரும், அப்படித்தான் நடக்கும்.

காமக்கழிப்பிலும், மென்மையான இசை லயித்தலிலும் மட்டும்தான் மனம் ஒன்றை நினைப்பதாக இருக்கின்றது என்கின்றனர் அறிவியலாளர்கள்.
மனதினாலே மார்க்கங்களும் பல உண்டு. மனமிருந்தால்; இடமுண்டு என்பது எவ்வளவு உண்மையான தத்துவம். எம்மை இயக்குவதே அதுதானே.
இராக்காலங்களின் மனதின் ஆதிக்கம் உச்சமாக இருக்கும். எங்களை வெருட்டி தன்வழிக்கு கொண்டுவர மனம் எடுத்துக்கொள்ளும் நேரம் பெரும்பாலும் இராக்காலங்களே.

மனதை கட்டுப்படுத்துவது பெரிதல்ல, மனதை மலரச்செய்தலே இங்கே முக்கியம். எங்கள் வெளி அறிவு, நல்லறிவுகளை மட்டும் மனம் கொள்ளச்செய்ய பயிற்சி எடுத்தலே மனதை மலரச்செய்யும் மார்க்கமாகும்.
அதற்குக்கூட மனம் இருந்தால்த்தான் இடம் உண்டு.
“இப்போது சொல்லுங்கள் மனம் வரமா? சாபமா?”

Friday, November 6, 2009

உயிர் சிந்தும் வேளையில்..


உடல் சிசைத்து உயிர் பிழியும் வெடியோசைகள் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது. நேற்றுவரை வயல்ஏறி வரப்புகட்டி, தமக்கன்றி நாட்டுக்கே சோறிட்ட மருதநிலம் இன்று பாலையாக்கப்பட்டிருந்தது.
நாளை தொல்பொருள் ஆய்வாளர் வந்து புகுனியும், மனித நாகரிகம் இருந்ததன் தடம் எதுவும் இல்லை என்று பகரும் அளவுக்கு கோரமாக இருந்தது நிலம்.

ஆளும் ஒரு இனம் ஆளப்படுமினத்தை அடக்கியதன் காரணத்தினால் வந்த வினை இது! ஆண்ட இனம் மறுபடி ஆள நினைப்பதை எதிரினக்காரன் மட்டும் அல்ல, அயலில் உள்ளவர்களும் சேர்ந்து மறுதலித்த காரணத்தின் ரணங்கள் இவை.
போதிமரங்களில் எல்லாம் வெடிகுண்டு பொருத்தி கும்பிடும் ஒரு பொல்லாத இனத்தினுடன் வாழ்ந்த பாவத்திற்காய் இவர்களுக்கு கிடைத்த சாபங்கள் இவை.

முன்னாலே கேட்ட பெரும்வெடியோசைகள் தொடர்ந்து அதே முன்திசையில் பல தூரங்களில் இப்போ கேட்டுக்கொண்டிருக்கின்றது. மரணம் வரை சென்று மரணம் மறுதலித்து துப்பப்பட்ட இருவர், மரணம் நோக்கி ஏங்கிக்கொண்டிருந்தனர்.
ஆக்கிரமிக்க வந்தவனின் முனகல் “ஆணே தெய்யோ” (கடவுளே), தன் நிலத்தை இறுதிவரை காக்க நினைத்தவனின் முனகல், “ஐயோ என் நிலமும் மக்களும் அழிக்கப்படுகின்றார்களே, என்னால் தடுக்கமுடியவில்லையே”

பல சடலங்களின் நடுவே, அவைபோல ஆகப்போகும் இவர்கள் இருவர். தலை சரித்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர். கால் சிதைந்துபோய், நெஞ்செல்லாம் இரத்தம் வழிந்துகொண்டு, மரணம் இழுக்கும் பொழுதிலும் தன் மக்கள் பற்றி கவலையுறும் மறவனின், புலம்பல்கேட்டு, சிங்களத்து சிப்பாய் அதிர்ந்துபோனான்.

அனைத்தும் தெரிந்தும், வஞ்சகர்களின் வசப்பு வார்த்தை கேட்டுத்தானே இங்கே வந்தேன்! இதில் அதிசகிப்பதற்கு எதுவும் இல்லை, வாய் விட்டு சொன்னான் “என்னை மன்னித்துவிடு”. இறந்துபோன எதிரி இராணுவத்தின் உடல்களை மரியாதை செலுத்தி கொளரவப்படுத்தி அனுப்பும் உங்கள் பெருமைக்கும், கிடைக்கும் உங்களவர்களின் உடல்களில் ஒட்டுத்துணியில்லாமல் செய்து சந்திகளில் காட்டி சிரிக்கும் எங்கள் காடைத்தனத்திற்கும் உள்ள வித்தியாசம் எனக்கு எபபோதோ புரிந்துவிட்டது. என்னை மன்னித்துவிடு!!

புன்னகைத்துக்கொண்டே சிப்பாயை தலைசாய்த்து பார்க்கின்றான் தமிழ் மறவன்.
மன்னிப்பா! நீ என்ன செய்வாய்? வறுமை பிணி எடுக்க, குடும்ப்பப்பொறை சுமக்க, சாதேடி வந்தவன். நீயும் ஒருவகையில் தியாகிதானே!

மீண்டும் அதிர்ந்தான் சிங்களத்துச் சிப்பாய், அப்படியா நினைத்தாய்!!
நினைவில்க்கூட நல்லதுகாண்கிறாயே! கும்பிடப்போகும் விகாரையின் எங்கள் பத்தசாமிகூட “தமிழனை அழித்து குலப்பெருமை நாட்டவேண்டும்”, இது சிங்களவனின், பௌத்தனின்பூமி, அவன்மட்டுமே இதன் வல்லாளன் என்று நஞ்சூட்டுவான்.

பறவாய் இல்லை, இத்தனை நாளாக எவ்வளவு காட்டுமிராண்டியாக நான் இருந்திருக்கின்றேன். உன் இனத்தினோர், எத்தனைபேனை, என் விரல் நுனிகளின் ஆழுத்தும் துப்பாக்கியால் இரையாக்கினேன். ஆனால் என்னை நானே வெறுக்கும் நிலையில், உயிர் பிரியும்போதும் உன் எதிரி என்னை!! தியாகி என்கின்றாயே..

மீண்டும் தமிழ் மறவன் முகத்தில் புன்னகை.. இந்த தெளிவு முன்னமே உனக்கிருந்தால் இத்தனை வேதனைகள் தேவையில்லை சகோதரனே.
புத்தன் ஞானம் பெற்றது போதிமரம்தான், கீதை பிறந்ததும் யுத்த களம்தான், உன் கண்கள் திறந்தும், நீ உண்மை புரிந்ததும் யுத்த களம்தான்.
நீ பௌத்தனாக பிறக்கவில்லை, பௌத்தனாக வளர்க்கப்படவில்லை, வளரவும் இல்லை, பௌத்தனாக வாழவும் இல்லை. அனால் இப்போது நிற்சயம் நீ பௌத்தனாக மரிக்கின்றாய். பெருமைகொள்வாய் என்றான்.

திடீர் என இருவர் மட்டும் உயிர் ஊசலாடும் இடத்தில் ஒரு பெருஒளிவெள்ளம். வெள்ளம்படும் இடம் தமிழ்மறவன் இருப்பிடம். அவன் முகத்தில் ஒரு பரவச நிலை. விடைகொடு சகோதரனே. ஏன்று அவன் தலை சரிந்துகொண்டு சென்றது.
“தமிழீழத்தாயகம்” என்று அவன் சொல்லிமுடித்த அந்த வாசகம் அந்த இடமே அதிரும்படியாக இருந்தது. அவன் உயிருடன் அந்த ஒளிவெள்ளம் விண்நோக்கிப்போனது. மிச்சமிருந்தவன் இடத்தில் மட்டும் திடீரென இருள் சூழ ஆரம்பித்தது.

Thursday, November 5, 2009

விரட்டும் விநோதங்கள்…


திசைகெட்டு காடொன்றில் அந்தரித்துக்கொண்டிருப்பேன். திடீர் என பகலவன் பின்வாங்கி இல்லாது போய்விடுவான், நெல்லிக்காய் வட்டத்தில் இருந்த அவன் தூரத்து நட்சத்திரமாக இருட்டில் ஒளி(ழி)த்துக்கொண்டிருப்பது மரங்களின் இடைவெளிகளில் தெரிந்துவிடும். அப்படி ஒரு இருட்டை என் வாழ்க்கையில் பார்த்திருக்கமாட்டேன் என்பது பொய். கண்களை முடுவதற்கு இனி இடமில்லை என்ற விசையில் இறுக்கி மூடிக்கொள்ளுங்கள் அப்படி ஒரு இருட்டு. துணையாக இந்த ஒரே ஒரு நட்சத்திரச்சூரியன் மட்டுமே.

நேரமும் போய்க்கொண்டிருக்கின்றது. வினோதமான சப்தங்கள் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தன. சப்தம் வரும் திசைகளும் அடிக்கடி மாறிக்கொண்டிருந்தன. தூரங்களும் வித்தியாசப்பட்டன.
பீதி மனதை ஆட்கொள்ள தொடங்கிய கணப்பொழுது அது.
வலமா? இடமா? முன்னா? பின்னா? என மனம் முடிவெடுக்கமுடியாதபடி பரிதவித்துக்கொண்டிருந்தது. திடீர் என ஒரு உந்தல் கொள்ளவே பின்புறம் திரும்பி
ஓடிக்கொண்டிருந்தேன். காலிலே செடிகள் முட்டிச் சத்தங்கள் வருவது கேட்டுக்கொண்டிருந்தது.

“குப்” என்றொரு சத்தம், நான் ஓடிவந்த திசையின் எதிர் பக்கமாக மல்லாக்காக நான் சாய்ந்துகொண்டிருந்தேன். இயலாமையினை வெளிப்படுத்தியிருந்த என் கண்களுக்கும், ஓலமிட்டு கத்திவிடக்கூட பயப்பட்ட என் வாய்க்கும் இடைப்பட்ட
பகுதியில் மரண ரணம் ஏற்பட்டிருந்தது.
சரிந்த உடனேயே கையால் மூக்கை தொட்டுப்பார்த்தேன கையில் திராவகமாக பிசுபிசுப்பு. பதம்பார்த்தது ஒரு மரமாகத்தான் இருக்கவேண்டும்!

உலகில் உச்சகொரூரம் இதை நான் காணும்போது....
திடீரென்று ஒரு பிரகாசம், உச்சத்தில் சந்திரன். வழமையினை விட இன்னும் பதிவாக இருந்தது சந்திரன்.
அதில் உள்ள பள்ளங்கள் இப்போது இல்லாமல், மாசுகள் ஏதுமற்று தூய்மையாக இருந்தது. அசுவாசப்படுத்திக்கொண்டே சுற்றும்முற்றும் பார்த்தேன்!
நான் ஓடிவந்த திசை சரியானதே.. சற்று தொலைவினில் ஒரு நதி தெரிந்தது.
சந்திரனின் ஒளியில் நதி குளித்துக்கொண்டிருந்தது. கரையில் ஒரு ஓடம்.

யோசிப்பதற்கு நேரம் இல்லை. ஓடிச்சென்று ஓடத்தை நதியேற்றி ஏறிப்பாய்ந்தேன் ஓடத்தில். ஏறிய விசையிலேயே ஓடம் சிறுதாரம் நதியின் அப்போதைய திரையினை கிழித்துக்கொண்டு சென்றது.
துடுப்பை போட்டு சென்றேன். மறுகரையில் சில குடிமனைகள் தெரிந்தது.
இன்னும் அருகே சென்றபோது அதில் எனது வீடும் தெளிவாக தெரிந்தது.
என்ன இது? என்வீட்டின் அருகில் நதி இல்லையே என மனம் எச்சரிக்கை செய்தது.

துடுப்புக்களை மனதுடன் சேர்த்து என் கைகளும் படபட என அடித்துக்கொண்டிருந்தது. என்ன அதிசயம், நான் நதியின் கரையினை அடைய அடைய, கரை தொலைவாகப்போய்க்கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் துடுப்புக்களை விடாது அடித்துக்கொண்டே இருந்தேன். தொடர்ந்தும் கரை தொலைவில் போய்க்கொண்டிருந்தது. படகோ முன்னால் பாய்ந்துகொண்டிருந்தது.

இப்போது எனக்கு ஒரு உண்மை புலப்பட்டது. என்னைமீறியும், இயல்புக்கு மீறியதுமான ஒரு சக்தி தற்போது இயங்கிக்கொண்டிருக்கின்றது, இதனை எதிர்ப்பதற்கு முடியவே முடியாது, என்ற பூரண சரணாகதி நிலைக்கு வந்தவனாக,
ஓடத்திலேயே மல்லாக்கே படுத்துக்கொண்டு உச்சியில் ஜொலித்த சந்திரனை ஏக்கத்துடன் பார்த்தேன். திடீர் என சந்திரனுக்கும்மேலாக பெரிய கருநிறவட்டம், சந்திரனின் ஒரு அசுமாற்றம், சந்திரன் திடீர் என அந்த வட்டத்தால் இழுக்கப்பட்டு அதற்குள் சென்று காணமற்போகின்றது.

ஆற்றங்கரையோரம் நின்ற மரங்கள், குடிமனைகள் எல்லாம் அந்த கருவட்டத்தை நோக்கி இழுக்கப்பட்டு வேகமாகச்செல்கின்றன.
மெதுவாக எனது ஓடத்திலும் ஒரு சலசலப்பு, திடீர் என ஓடத்துடன் சேர்த்து மிக வேகாக நானும் அதை நோக்கி இழுக்கப்படுகின்றேன்.
அதன் வேகத்தால் என்னால் மூச்சுவிட்டுக்கொள்ளமுடியவில்லை.
கருவளையத்தின் அருகில் வந்துவிட்டேன். கை கால்களை முடிந்த மட்டும் அசைத்து அடிக்கின்றேன். டம்..டமார் என்று சத்தங்கள் கேட்கின்றது. அட..என் கட்டிலில் நான் உறக்கத்தில் கைகால்களால் அடித்துக்கொண்டிருக்கும் உணர்வு முதல்முறையாக வந்து, அதனுடன் ஒரு மகிழ்ச்சி உணர்வும் சேர்ந்துவருகின்றது.

Tuesday, November 3, 2009

ஒரு கிராமத்தின் காலைப்பொழுது


தூரத்து பனங்கூடல்வழி புறப்படும் என் அற்றைப்பொழுதுகளில், துணையாக புறம்படும் பல சிந்தனைகள். மார்கழி மாத கூதிர்ப்பனி காலங்களில், பனிப்புகார்களின் ஊடாக தூரத்து காட்சியாக வைரவர்கோவிலை பார்த்துகொண்டு வயல்வரப்புகள் கடந்து வரும் சுகமும், காணும் கண்ணின் காட்சியும் அற்புதமானவை.

அந்தநேரம் கணீர் என காதுகளில் ஒலிக்கும் சுற்றுக்கோவில் மணிகளின் ரீங்காரங்களும், மெல்லமெல்ல, எட்டிப்பார்த்து கூட்டில் இருந்து உற்சாகமாகப்பறந்துவரும் பறவைகளின் வருகைகளும், நடக்கும்போது கால்களில் பன்னீர்தெளித்து சில்லிடவைக்கும் புற்களில்; தெறித்திருக்கும் பனித்துளிகளும் எவ்வளவு அற்புதமான அனுபவங்கள்.

இந்த சுகந்தம் தரும் அதிகாலையில், சால்வையால் உடலைப்போர்த்திக்கொண்டு இரண்டு கைகளையும் மிக இறுக்கமாகக்கட்டிக்கொண்டே, மெல்லிய மங்கலான வெளிச்சத்தில் இயற்கையும் சொந்த நிலமும் தரும் சுகங்களையும் அனுபவிப்பவனே தன் பிறப்பின் அர்த்தங்களை அனுபவிப்பவனாக இருப்பான்.

மெல்லமெல்ல நடந்துவரும்வேளைகளில் சற்றுத்தொலைவில் ஊரின் பிரதான சாலையில் அன்றைய முதலாவது பேருந்து கடந்துசெல்லும் சத்தமே ஒருவித இனந்தெரியாத சந்தோசத்தையும் மனதுக்குள் தந்துவிட்டுப்போகும்.
குடிமனைகளில் ஒவ்வொரு வேலிகளின் மேலும் தலையில் முண்டாசை சுற்றிக்கொண்டு பல்துலக்கும்; பெரியவர்களின் தலைகள் மெல்ல மெல்ல முளைக்கத்தொடங்கும்.

ஊர் சுறுசுறுப்படையத் தொடங்கும் வேளைக்கு முன்னதாகவே, குளக்கரை ஓரமாக சுதந்திரமாக இயற்கையின் கடன்களை முடித்துவிட்டு, வேப்பங்குச்சியால் பல்துலக்கி பக்கத்தில் மழைநீர் தேங்கி சில்லிடவைக்கும் ஏரியில் குளித்துவிட்டு, ஈரவேட்டியில் இருந்து, சுற்றிவந்த சால்வைக்கு மாறி, வேட்டியை பிழிந்துவிட்டு கையில் ஏந்தியவாறு வீடுநோக்கிவரும்போது, காலைவேளை காட்சிகள் அற்புதமாக மனதில் பதியும், குருவிகளின் கீச்சிடல்களும், அணில், புறாக்களின் சத்தங்களையும் கேட்டுக்கொண்டு வீடுநோக்கி நடக்கும்போது அப்பப்பா…எப்படி ஒரு கம்பீரம் மனதுக்குள் வந்துவிடும்.

வயல்வேலைகளுக்கு புறப்படும் “உலகைச்சுமக்கும் உழவர்களை” கடந்து, அலுவலக வேலைக்ளுக்கு செல்வதற்காக அதற்காகவே பிரதான வீதிக்குவரும் இரண்டாவது வண்டியை பிடிக்க செல்லும் அலுவலகர்களைத்தாண்டி, கீச்சிடும் குரல்களுடன், குழுக்களாக உற்சாகமாக பள்ளிசெல்லும் குழந்தைகளைத்தாண்டி, சைக்கிள் மணியை கிலுங்கச்செய்து கடிதம் கொண்டுவரும் தபால்க்காரரை தாண்டி, கோயில்பூசை முடித்து வீடு திரும்பும் அர்ச்சகரை தாண்டி, தேனீர்க்கடை தாண்டி, சுறுசுறுப்பாக தொழிலில் அப்போது இறங்கியிருக்கும் பலசரக்கு கடையினை தாண்டி, சுடச்சுட பெட்டியில் பாண் கொண்டுவந்து இறக்கும் வெதுப்பகக்காரரை தாண்டி,

இப்படி அதிகாலையில் உற்சாகங்கள் அத்தனையும் தாண்டி கையில் ஒரு பத்திரிகையும் வாங்கி வீடுவந்து சேரும்போது, இந்த காலைவேளையில் கண்ணுக்கும் மனதுக்கும் எத்தனை சந்தோசமான காட்சிகள் கிடைத்துவிடுகின்றன.

வந்தவுடன் பனங்கட்டியுடன், சுடச்சுட ஆவி பறக்க தேனீர் தரும் மனைவியின் மங்களகரமான முகத்தினை பார்த்து புன்னகைத்தபடியே, வாங்கிப்பருகி, பத்திரிகை படிக்கும்போது, சுளகில் குற்றி உடைத்த பயறுபோக, குறுனலாகியவற்றை தெரிந்தெடுத்து, தேங்காய்ப்பூவும் போட்டு, வெல்லத்துடன் கலந்து குழைத்து கொண்டுவருவாள் மனையாள். இதை சாப்பிடும் போது…..

நிறுத்துங்கள் தாத்தா..!!

என்று கத்தியே விட்டான் விமலன். உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரிலே ஆக்கிரமிப்புக்குள்ளான அந்த நிலத்தின் பெருமைகளை, பிறந்ததிலிருந்து இதுவரை பார்க்காமல், இந்த முள்வேலிக்குள்ளும், சுற்றிவர வேதனைகளுக்குள்ளும்; இருந்துகொண்டு இதற்கு மேலும், தான் அறியாத தன் ஊரின் விடியல்காட்சி பற்றி கேட்க அவன் தயாரில்லை…..
சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

Monday, November 2, 2009

நதிவழி போகும் பயணங்களில்….


தமிழுக்கும், தமிழ்தாய்க்கும் பாதம் பணிந்து வலைப்பதிவுகள் என்னும் இடுகைக்கு புதியவனாக நதிவழியே எனது வலையுலக பிரவேசத்தை வெள்ளோட்டம் செய்துகொள்கின்றேன்.

தனிமை வாட்டும் இராக்காலப்பொழுதுகளில், இலக்கியப்படைப்புக்களில் பார்வை புதைத்து கிரயம் செய்துவிட்டு, முகடுபார்த்து சரியும்போது, மனதில்தோன்றும் அசரீதியான, என் எண்ணங்கள் அந்த இராக்காலங்களுடன் விடைபெற்றுக்கொள்கின்றன.

உத்தரவின்றி உள்ளே வந்த அந்த சிந்தனைகள், நிலமில்லா விதைகளாக காற்றில் கலந்துபோன நாட்கள் கடந்து, வலைப்பதிவெனும் இந்த ஆளமான நிலத்தில், நதிவழியில் பயணித்து நதி பிரவாகம் கொள்ளும் கரைவழியே தூவிவிட்டு செல்கின்றேன். அவை இப்படித்தான், இந்த மரம்தான் முளைக்கும் என நிச்சயம்படுத்திக்கொள்ள முடியாது. இந்த விதைகளில், கற்பக தருக்களும் முளைக்கலாம், காஞ்சோண்டிகளும் எட்டிப்பார்க்கலாம். நிச்யமாக நச்சுசெடிகள் மட்டும் முளைக்காது.

நதி வழியில் என் பயணங்களை தொடக்கிவைத்த அன்பு நண்பர், பிரபல எழுத்தாளர், பதிவர் அண்ணன் ஜனா அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டு, அதேவேளை இலக்கிய தாகத்தை அவருடன் சேர்த்து என்னுள் விதைத்த பதிவுலக நண்பர்களான அடலேறு, எவனோ ஒருவன், நிலாரசிகன் ஆகியோருக்கும் மனங்கனிந்த நன்றிகளுடன் இந்த ஓடை நிதியாகின்றது.

என்றும் அன்புடன்
சயந்தன்.