Thursday, November 5, 2009

விரட்டும் விநோதங்கள்…


திசைகெட்டு காடொன்றில் அந்தரித்துக்கொண்டிருப்பேன். திடீர் என பகலவன் பின்வாங்கி இல்லாது போய்விடுவான், நெல்லிக்காய் வட்டத்தில் இருந்த அவன் தூரத்து நட்சத்திரமாக இருட்டில் ஒளி(ழி)த்துக்கொண்டிருப்பது மரங்களின் இடைவெளிகளில் தெரிந்துவிடும். அப்படி ஒரு இருட்டை என் வாழ்க்கையில் பார்த்திருக்கமாட்டேன் என்பது பொய். கண்களை முடுவதற்கு இனி இடமில்லை என்ற விசையில் இறுக்கி மூடிக்கொள்ளுங்கள் அப்படி ஒரு இருட்டு. துணையாக இந்த ஒரே ஒரு நட்சத்திரச்சூரியன் மட்டுமே.

நேரமும் போய்க்கொண்டிருக்கின்றது. வினோதமான சப்தங்கள் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தன. சப்தம் வரும் திசைகளும் அடிக்கடி மாறிக்கொண்டிருந்தன. தூரங்களும் வித்தியாசப்பட்டன.
பீதி மனதை ஆட்கொள்ள தொடங்கிய கணப்பொழுது அது.
வலமா? இடமா? முன்னா? பின்னா? என மனம் முடிவெடுக்கமுடியாதபடி பரிதவித்துக்கொண்டிருந்தது. திடீர் என ஒரு உந்தல் கொள்ளவே பின்புறம் திரும்பி
ஓடிக்கொண்டிருந்தேன். காலிலே செடிகள் முட்டிச் சத்தங்கள் வருவது கேட்டுக்கொண்டிருந்தது.

“குப்” என்றொரு சத்தம், நான் ஓடிவந்த திசையின் எதிர் பக்கமாக மல்லாக்காக நான் சாய்ந்துகொண்டிருந்தேன். இயலாமையினை வெளிப்படுத்தியிருந்த என் கண்களுக்கும், ஓலமிட்டு கத்திவிடக்கூட பயப்பட்ட என் வாய்க்கும் இடைப்பட்ட
பகுதியில் மரண ரணம் ஏற்பட்டிருந்தது.
சரிந்த உடனேயே கையால் மூக்கை தொட்டுப்பார்த்தேன கையில் திராவகமாக பிசுபிசுப்பு. பதம்பார்த்தது ஒரு மரமாகத்தான் இருக்கவேண்டும்!

உலகில் உச்சகொரூரம் இதை நான் காணும்போது....
திடீரென்று ஒரு பிரகாசம், உச்சத்தில் சந்திரன். வழமையினை விட இன்னும் பதிவாக இருந்தது சந்திரன்.
அதில் உள்ள பள்ளங்கள் இப்போது இல்லாமல், மாசுகள் ஏதுமற்று தூய்மையாக இருந்தது. அசுவாசப்படுத்திக்கொண்டே சுற்றும்முற்றும் பார்த்தேன்!
நான் ஓடிவந்த திசை சரியானதே.. சற்று தொலைவினில் ஒரு நதி தெரிந்தது.
சந்திரனின் ஒளியில் நதி குளித்துக்கொண்டிருந்தது. கரையில் ஒரு ஓடம்.

யோசிப்பதற்கு நேரம் இல்லை. ஓடிச்சென்று ஓடத்தை நதியேற்றி ஏறிப்பாய்ந்தேன் ஓடத்தில். ஏறிய விசையிலேயே ஓடம் சிறுதாரம் நதியின் அப்போதைய திரையினை கிழித்துக்கொண்டு சென்றது.
துடுப்பை போட்டு சென்றேன். மறுகரையில் சில குடிமனைகள் தெரிந்தது.
இன்னும் அருகே சென்றபோது அதில் எனது வீடும் தெளிவாக தெரிந்தது.
என்ன இது? என்வீட்டின் அருகில் நதி இல்லையே என மனம் எச்சரிக்கை செய்தது.

துடுப்புக்களை மனதுடன் சேர்த்து என் கைகளும் படபட என அடித்துக்கொண்டிருந்தது. என்ன அதிசயம், நான் நதியின் கரையினை அடைய அடைய, கரை தொலைவாகப்போய்க்கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் துடுப்புக்களை விடாது அடித்துக்கொண்டே இருந்தேன். தொடர்ந்தும் கரை தொலைவில் போய்க்கொண்டிருந்தது. படகோ முன்னால் பாய்ந்துகொண்டிருந்தது.

இப்போது எனக்கு ஒரு உண்மை புலப்பட்டது. என்னைமீறியும், இயல்புக்கு மீறியதுமான ஒரு சக்தி தற்போது இயங்கிக்கொண்டிருக்கின்றது, இதனை எதிர்ப்பதற்கு முடியவே முடியாது, என்ற பூரண சரணாகதி நிலைக்கு வந்தவனாக,
ஓடத்திலேயே மல்லாக்கே படுத்துக்கொண்டு உச்சியில் ஜொலித்த சந்திரனை ஏக்கத்துடன் பார்த்தேன். திடீர் என சந்திரனுக்கும்மேலாக பெரிய கருநிறவட்டம், சந்திரனின் ஒரு அசுமாற்றம், சந்திரன் திடீர் என அந்த வட்டத்தால் இழுக்கப்பட்டு அதற்குள் சென்று காணமற்போகின்றது.

ஆற்றங்கரையோரம் நின்ற மரங்கள், குடிமனைகள் எல்லாம் அந்த கருவட்டத்தை நோக்கி இழுக்கப்பட்டு வேகமாகச்செல்கின்றன.
மெதுவாக எனது ஓடத்திலும் ஒரு சலசலப்பு, திடீர் என ஓடத்துடன் சேர்த்து மிக வேகாக நானும் அதை நோக்கி இழுக்கப்படுகின்றேன்.
அதன் வேகத்தால் என்னால் மூச்சுவிட்டுக்கொள்ளமுடியவில்லை.
கருவளையத்தின் அருகில் வந்துவிட்டேன். கை கால்களை முடிந்த மட்டும் அசைத்து அடிக்கின்றேன். டம்..டமார் என்று சத்தங்கள் கேட்கின்றது. அட..என் கட்டிலில் நான் உறக்கத்தில் கைகால்களால் அடித்துக்கொண்டிருக்கும் உணர்வு முதல்முறையாக வந்து, அதனுடன் ஒரு மகிழ்ச்சி உணர்வும் சேர்ந்துவருகின்றது.

5 comments:

  1. பறவாய் இல்லை கனவுகளில்க்கூட உங்களுக்கு விஞ்ஞானக்கனவுகள்தான் வருகின்றன. ஓடம் முன்னேபோவதுபோல பின்னால்போவது(விசையறுநிலை), கருவளைய ஈர்ப்பு (பிக்பான்க்) சூரியன் சுருங்குவது என்று விஞ்ஞாக்கனவுகள் வந்து, உங்கள் மூலம் இலக்கியநடையில் பதிவாகியுள்ளது. நன்றாகத்தான் இருக்கு இதுவும்.

    ReplyDelete
  2. முதல்ல வளங்கவில்லை. ஊசா அக்காவின் பின்னூட்டலின் பின்னர் கொஞ்சம் புரியுது.

    ReplyDelete
  3. ஒரு அபரிமிதமான சிந்தனையாளனின் கனவும், கனவை பகிர்ந்த விதமும் பிரமிக்கவைக்கின்றது நண்பரே. சிறப்பாக உள்ளது.

    ReplyDelete
  4. சாகித்தியாNovember 6, 2009 at 9:15 PM

    சிறப்பான ஒரு பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. உஷா அக்கா, டிலான், நிவேதா, சாகித்தியா அனைவருக்கும் எனது மனம் கனிந்த நன்றிகள்.

    ReplyDelete